திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போன 10 வயது சிறுவனை மீட்ட காவல்துறையினர்
திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தற்போது தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 10 வயது சிறுவனுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு நேற்று வந்துள்ளனர்.
அப்போது அவர்களது 10 வயது சிறுவன் கோவில் வளாகத்தில் இருந்து காணாமல் போய் உள்ளார். இதுகுறித்து சிறுவனின் தந்தை திருச்செந்தூர் கோவில் புறக்காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் புறக்காவல் காவல் நிலைய போலீசார் சிறுவன் காணாமல் போனது குறித்து ஒலிப்பெருக்கி மற்றும் ரோந்து மேற்கொண்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் காவலர் அசோக்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்ட போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தகுமாரபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டு விசாரித்தனர்.
அந்த சிறுவனால் சரிவர தகவல் சொல்ல முடியாததைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு திருச்செந்தூர் கோவில் புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் ஏற்கெனவே புறக்காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வந்த சிறுவன் அவர் என தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த சிறுவனின் பெற்றோர் தாலுகா காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு காவல் ஆய்வாளர் முரளிதரன் உத்தரவின்படி, சிறப்பு உதவியாளர் கனகராஜ் மற்றும் காவலர் அசோக்குமார் ஆகியோர் அந்தச் சிறுவனை பத்திரமாக அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு காணாமல் போன சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் காவலர் அசோக்குமார் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu