அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த, பூமி பாதுகாப்பு தின கருத்தரங்கில் வேண்டுகோள்

பூமி பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில், சமுதாயக் கூடத்தில் வைத்து பூமி பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி தலைமை தாங்கினார். மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கரோலின் ஜெபசீலி, பாலவனிதா, மகராசி சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
நாம் வாழுகின்ற பூமியின் வயது ஏறத்தாழ 4,500 மில்லியன் ஆண்டுகள் ஆகும் .இதன் மொத்த பரப்பளவு 196,950,000 சதுர மைல்கள் ஆகும். மொத்த பரப்பளவில் 71 சதவீதம் நிலத்தின் அளவு 139,440,000 சதுர மைகளாகும். பூமியின் மிக உயரமான பகுதி ( 29,028 அடிகள்) எவரெஸ்ட் சிகரம் ஆகும்.
பூமியின் ஆழமான கடல் பகுதி பிலிப்பைன்ஸ் அருகில் உள்ள மரியானாஸ் ட்ரென்ச் பகுதி கடல் மட்டத்திலிருந்து 36, 198 அடி கீழ் உள்ளது. பூமியை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் சமீப காலமாக கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியில் வெப்பநிலை உயர்ந்து தென்துருவ பனிப்பிரதேசம் உருகுவதன் மூலம் கடலில் நீர்மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காற்றை மாசுபடுத்தும் செயல்களை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். காற்றை தூய்மைப்படுத்தும் காடுகள் வளர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டும். சூரிய ஒளியிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்,புறஊதாக்கதிர்களின் பூமியை காத்திருக்கும் ஓசோன் படலம் மெலிந்து அதில் ஓட்டை விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ரசாயன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த உலகை ஒரு முறை அளிப்பதற்கு எவ்வளவு அணு ஆயுதங்கள் தேவையோ அதைவிட பல மடங்கு அழிப்பதற்கான அணு ஆயுதங்கள் இந்த பூமியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இனி மூன்றாவது உலக யுத்தம் ஏற்படுமானால் அது அணு ஆயுதப் போராகவே இருக்கும். அத்தகைய போரில் தோற்றவனும் உயிரோடு இருக்க போவதில்லை, வெற்றி பெற்றவனும் உயிரோடு இருக்கப் போவதில்லை." அணு ஆயுத ஆலைகள் மிக பாதுகாப்பாக கட்டப்பட்டிருந்தாலும் கூட அணு உலையில் ஏற்படுகின்ற விபத்து என்பது மிகவும் அபாயகரமானது.
ஆகவே "உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்" பகுத்தறிவு கொண்ட "மனிதர்கள் நமக்கு கிடைத்துள்ள இந்த பூமியை பாதுகாக்க வேண்டும்" பூமியின் அழிவுக்கு வழி வகுக்கும் செல்களில் ஈடுபடக்கூடாது என கென்னடி பேசினார்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. முன்னதாக, மதர் இளம்பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சுஜிதா அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் கற்பகதரு பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சுமித்ரா நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன நிர்வாகிகள் மற்றும் லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu