ஒரு கோடி பனை மர விதைகள் நடும் பணி: சமூக ஆர்வலருக்கு பாராட்டு
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை மேம்படுத்த, புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கக்கூடிய தமிழர்களின் தேசிய மரமான பனை மரங்களை ஒரு கோடி வளர்க்க வேண்டும் என்ற பணியை அவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளாக கடற்கரை, தீவு பகுதியிலும், ஆற்றங்கரையோரங்கள், குளத்தின் கரையோரங்கள், வாய்க்கால் கரை போன்ற நீர் பிடிப்பு பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகிறார்.
தற்போது வரை 74, 86,437 பனை மர விதைகளை அவர் விதைத்துள்ளார். இந்த சேவைகளை பாராட்டுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஆகியவை சார்பில் நடந்த விழாவில், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடிக்கு கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் விருது வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழினியன் விருதை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் மாவட்ட அமைப்பாளர் யாசர் அரஃபத், மாவட்டத் தலைவர் முரசு தமிழப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், தமிழ் குட்டி, திருச்செந்தூர் நகர செயலாளர் சங்கத்தமிழன் உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu