பிச்சிவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா
திருச்செந்தூர் ஒன்றிய ஆணையர் ராணி
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 827 வாக்குகளில், பட்டியல் இனத்தவர் வாக்குகள் 6 மட்டுமே உள்ளது. ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பெரும்பான்மையாக உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படுத்தும் வகையில் வார்டு உறுப்பினர் தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில் காலியாக உள்ள பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 1-வது வார்டுக்கு வைகுண்டசெல்வி, 2-வது வார்டுக்கு கேசவன், 3-வது வார்டுக்கு நடராஜன், 4-வது வார்டுக்கு சுஜாதா, 5-வது வார்டுக்கு யாக்கோபு, 6-வது வார்டுக்கு பரிமளசெல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்று கொண்டனர். இதையடுத்து பிச்சிவிளை ஊராட்சித் துணைத்தலைவர் தேர்வு நடத்த, திருச்செந்தூர் ஒன்றிய ஆணையர் ராணி, ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேரும் திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சித் தலைவரிடம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "எங்களது ஊராட்சியில் 6 ஓட்டுக்களே பட்டியல் இனத்தவருக்கு உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு குறைந்தது 50 ஓட்டுக்களுக்கு மேல் இருந்தாலும் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். எனவே ஊர்மக்கள் முடிவுப்படி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம். எங்களுக்கு பதவியில் தொடருவதற்கு எந்த விருப்பம் இல்லை. எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவோம்" என்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறும்போது, "துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புத்தகத்தில் தீர்மானமாக கொண்டு வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும்" என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu