நாசரேத்தில் பனை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாசரேத்தில் பனை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

நாசரேத்தில் நடைபெற்ற பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் பனை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மூக்குக்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி தாளாளர் செல்வின் தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோல்டா சாமுவேல் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் முன்னிலை வகித்தார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி பேசியதாவது:-

பனைமரம் தமிழர்களின் அடையாளம் பனையின் நுனி முதல் வேர் வரை பயன்தருகிறது. எனவே இதனை கற்பக தரு என அழைக்கின்றனர். பனை மரங்களை கடற்கரை ஓரங்களில் வளர்வதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, புயல், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கிறது. நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது.


கடல் நீரை விவசாய நிலத்துக்குள் புகாமல் தடுக்கிறது. ஒரு பனைமரம் சுமார் 25ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க கூடியது. நீர் பிடிப்பு பகுதியிலான ஆற்றங்கரை குளத்தங்கரை வாய்க்கால் பகுதிகளில் பனை மரங்களை வளர்ப்பதினால் மண்ணரிப்பை தடுத்து கரையை வலுப்படுத்துகிறது. பண்டைய காலங்களில் வீட்டின் கூரை மேய்வதற்கு பனையின் ஓலைகளே பயன்பட்டன. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக்காலங்களில் சூட்டையும் வழங்கி மனிதர்களை காப்பாற்றின.

தற்போது பனை ஓலையை கொண்டு பாய் பின்னுதல் மற்றும் அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்து வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. மேலும் பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், கல்கண்டு, பனசீனி, நுங்கு, பனபழம், பனங்கிழங்கு,போன்ற உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன.

இதுபோன்ற அளவிட முடியாத பயன்களையும், வளங்களையும் கொண்டிருப்பதால்தான் பனை மரங்கள் "பூலோக கற்பக விருட்சம்" என்று சிறப்பித்து கூறப்படுகின்றன. இந்த பனைப் பொருட்களை உண்டு வாழ்ந்ததினால் நம் முன்னோர்கள் அதிக ஆயுளுடன், ஆரோக்கியமாக, வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இத்தகைய சிறப்புகளையும், ஒப்பற்ற நன்மைகளையும் தரக்கூடிய இப்பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே. மேலும் பனை மரத்தின் பயன்பாடுகள் அளப்பரியவை. பனை மரங்கள் நம் மண்ணிற்குரிய சிறப்பு மிக்கவை. பனை வளத்தை அழிக்காமல் பாதுகாத்து, வளர்த்து , பயனடைவோம் என கென்னடி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது, ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடியின் சேவையைப் பாராட்டி சேகர குரு ஜான் சாமுவேல் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் திருமறையூர் மறுருப ஆலய வளாகத்தில் பனைமர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், செயலாளர் இம்மானுவேல், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, திட்ட அலுவலர் மரியராஜ், சேகர குரு ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology