திருச்செந்தூர் அருகே மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

திருச்செந்தூர் அருகே மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
X

ஆசிரியர் சதீஷ்குமார் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). இவர், பணிக்கநாடார்குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து பரமன்குறிச்சி வழியாக ஆசிரியர் சதீஷ்குமார் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுநாலுமூலைக்கிணறு அருகில் வரும் போது மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆசிரியர் சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உள்ளார். அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவதமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆசிரியர் சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தால் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்திலும் சதீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை அவரது உடல் உறுப்புகளான இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

அவரது இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து சதீஷ்குமார் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து சதீஷ்குமாரின் உடல் சொந்த ஊரான கீழ நாலுமூலைகிணறு மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், டிஎஸ்பி வசந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆசிரியர் சதீஷ்குமாரின் இறப்பு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!