சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி மணி மண்டபத்தில் அமைச்சர், ஆட்சியர் மரியாதை
வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினத்தந்தி அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான சிவந்தி ஆதித்தனாரின் 88 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழுவுருவ சிலைக்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தனார். அன்னாரது தந்தை சி.பா. ஆதித்தனார் 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். ஏளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தனார் ஈடுபட்டார்.
சிவந்தி ஆதித்தனாரிடம் 1959 ஆம் ஆண்டு தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பை சி.பா.ஆதித்தனார் ஒப்படைத்தார். திருச்செந்தூரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சிவந்தி ஆதித்தனார் நிறுவினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 1995 ஆம் ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982 ஆம் ஆண்டும், 1983 ஆம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர செரீப் ஆக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார். விளையாட்டு துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார். அகில இந்திய கராத்தே பெடரேசன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000 ஆவது ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்தசேவை புரிந்ததற்காக சிவந்திஆதித்தனாருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அன்னாரது 88 ஆவது பிறந்தநாளையொட்டி அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றஉறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், வீரபாண்டியபட்டினம் ஊராட்சிமன்றத் தலைவர் எல்லமுத்து, சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu