திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ஏமாற்றம்..!

திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ஏமாற்றம்..!
X

திருச்செந்தூர் கோயில் வாசலின் காத்திருந்த பால்குடம் எடுத்த பக்தர்கள்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற தரிசனத்திற்கு அனுமதிக்காததால் வேதனையடைந்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா காலங்களை தவிர்த்து கோயிலுக்கு பக்தர்கள் வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட இன்று கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்தாலும் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதனையெடுத்து கூட்ட நேரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

ஆனால், சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட அந்த வரியை கண் துடைப்பு நாடகம் போல் சில நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இதனால் வேல் குத்தி, காவடி எடுத்து, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால், சண்முகாஸ் மண்டபம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் அந்த பக்தர்களை தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மனவேதனையுடன் திரும்பிச் சென்று பொது தரிசனம் வழியாக கோயிலுக்குள் சென்றனர். கோயிலுக்கு வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி தர வேண்டும் என முருகப் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!