நாசரேத்–மதுரை இடையே 25 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி…

நாசரேத்–மதுரை இடையே 25 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி…
X

அரசுப் பேருந்து. (மாதிரி படம்).

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்- மதுரை இடையே கடந்த 25 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அடுத்தப்படியாக அதிக கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியாக நாசரேத் உள்ளது. நாசரேத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்தும், தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நாசரேத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லை என அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது, நாசரேத்- மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாசரேத் பகுதி மக்கள் கூறியதாவது:

நாசரேத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணியளவில் புறப்பட்டு கடையனோடை, ஏரல், முக்காணி, தூத்துக்குடி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து (தடம் எண் 553 NX 2) தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. நாசரேத்தில் இருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு இதே வழித்தடத்தில் ஆத்தூர், புன்னக்காயல் வரை செல்லும் தனியார் பேருந்து தற்போது நாசரேத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு பதிலாக 4.40 மணிக்குதான் புறப்படுகிறது. அதன் பிறகு மாலை 5.15 மணிக்கு கிளம்ப வேண்டிய அரசு பேருந்து தடம் எண் 553 NX இல்லை என்பதால், அந்த வழித்தடத்தில் செல்ல வேறு பேருந்துகள் இல்லை.

இரவு 7.30 மணிக்கு அதே தனியார் பேருந்துதான் திரும்ப வந்தாக வேண்டும். 5.15 மணிக்கு அரசு பேருந்தில் சென்று வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது பேருந்து வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்தில்தான் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை பார்க்கும் பொதுமக்கள், இந்த வழித்தடத்தை அரசு போக்குவரத்து கழகம் தனியாருக்கு விட்டுக் கொடுப்பதுபோல் தோன்றுகிறது என அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவது பாராட்டுக்குரியது.

அதே வேளையில், போக்குவரத்து வசதியற்ற வழித்தடம் உருவாகுவதை தடுக்கும் வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு மீண்டும் அரசுப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future