ஒரே கிராமத்தில் 900 பேருக்கு மனைப்பட்டா வழங்கிய கனிமொழி எம்.பி.
புன்னக்காயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாக்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை குடியிருப்பு பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, புன்னக்காயல் கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்சியில், 840 பேருக்கு ரூ.1312 கோடி சந்தை மதிப்பில் குடியிருப்பு பட்டா மற்றும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60 லட்சம் சந்தை மதிப்பில் வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 900 பேருக்கு ரூ.1313 கோடி சந்தை மதிப்பிலான பட்டாக்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது:
நமக்கென்று ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையாகும். நமக்கு பிறகு நமது பிள்ளைகள் அந்த வீட்டின் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவு. நீங்கள் பட்டா பெறுவதற்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சியினை முடிக்க முடியாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், 840 பேருக்கு குடியிருப்பு பட்டா, 60 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.
இந்த பட்டா கிடைப்பதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய அளவில் உழைத்து இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரின் கோரிக்கையையும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி தந்து இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு புன்னக்காயல் மக்களுக்கு ரூ.1,313 கோடி சந்தை மதிப்பிலான நிலத்தை இன்று பட்டாவாக வழங்கி இருக்கிறது என்பது தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளில் நாம் கொண்டாடக்கூடியதாக உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பேவர் பிளாக் சாலைகள் பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மீன் இறங்குதளம் மற்றும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரக்கூடிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் உங்களுக்காக பணியாற்றிக் கொணடிருக்கிறோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu