திருக்கோயில்களில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்…
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு பக்தர்களின் வசதிக்காக செல்போன் பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ. 300 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை திருக்கோயிலுக்கு அழைத்து வர 4 புதிய வாகனங்களை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், திருக்கோயில் அன்னதான கூடத்தினை பார்வையிட்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
திருக்கோயில் வளாகத்தில் புதிய கைப்பேசி பாதுகாக்குமிடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் திருக்கோயிலில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பக்தர்கள் அதிகமாக வருகை தரும் திருக்கோயில்களுக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தொலைநோக்கு பார்வையுடன் செய்திட உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 10 திருக்கோயில்களில் பெருந்திட்ட வசதிகள் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பணிகளை முதல்வர் 28.09.2022 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் மூலம் ரூ. 100 கோடி மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி நன்கொடை அளித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தண்ணீர் தொட்டி, துணை மின்சார நிலையம், நிர்வாக அலுவலகம் போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய 80,000 சதுர அடிக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. திருக்கோயில் சார்பில் ரூ. 100 கோடி மதிப்பில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகளை தொடங்க உள்ளோம்.
குறிப்பிட்ட 2 ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவேற்றப்படும். பக்தர்கள் தங்கும் விடுதி அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பிப்ரவரி 3 ஆம் தேதி சன்னதியை சுற்றி ரூ. 16 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் தாமாகவே விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu