பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சுகாதாரமும், கல்வியும் இரு கண்கள் என்ற வகையில் சுகாதாரத்தையும் கல்வியை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்விச் செல்வத்தை மட்டும்தான் யாரும் எடுத்து செல்ல முடியாது. அது உங்களோடே இருக்கும்.
கல்வி வளர்ந்தால்தான் ஒரு நாடு வளரும். கடலோர மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவிய பெருமை இந்த கல்வி நிறுவனத்திற்கு உண்டு. இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபொழுது பள்ளிக்கு வராத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்கள். எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்கள். கருணாநிதி முட்டைகள் வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையின மக்களை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும் என்று கூறினார். மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் தாய், தந்தையரின் சொல்லைக் கேட்டும் அதுபோல ஆசிரியரின் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சியில் ரூ. 28.12 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய விநியோக மின் மாற்றிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய தாளாளர் மற்றும் இயக்குநர் பிரொமில்டன் லோபோ, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரம்மநாயகம், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதிஸ் வி ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu