குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
குலசை கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.
புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு, தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. திருகாப்பு கட்டி வேடமணிந்த பக்தர்கள் குழுக்களாகவும், தனியாகவும் வீடு வீடாக சென்று பெற்ற காணிக்கையை இன்று கோயில் உண்டியலில் செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி மஹிசா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 இடங்களில் 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 தற்காலிக பேருந்து நிலையங்கள், 28 இடங்களில் கார், பைக் வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.
கோயில் கடற்கரை, பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடங்கள் உட்பட 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 5 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், தசரா குழுக்கள் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் தடுப்புகள் அமைத்து அதில் தசரா குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நெரிசல் ஏற்படாமல் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் போலீசார் போல் வேடமணிய கூடாது, உலோகத்திலான ஆயுதங்கள் எடுத்து வரக் கூடாது, ஜாதி ரீதியான அடையாளங்கள் கொடி எடுத்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படும் வகையில் மருத்துவ குழுக்கள் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையில் பக்தர்களிடம் கணிவாக நடந்தது கொள்ள வேண்டும். பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu