குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ. 4.11 கோடி

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ. 4.11 கோடி
X

குலசை முத்தாரம்மன் கோயில். (கோப்பு படம்).

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, உண்டியல் காணிக்கையாக ரூ.4.11 கோடி கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது ஆகும். இந்த திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழவதும் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பது உண்டு.

மேலும், முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்காக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பல்வேறு வேடமணிந்து பொதுமக்களிடம் காணிக்கை வசூல் செய்து அதை கோயில் உண்டியலில் செலுத்துவது வழக்கம். சிலர் குடும்பத்தோடு இவ்வாறு வேடமணிந்து கலந்து கொள்வது உண்டு.

தசரா திருவிழா முன்னிட்டு, ஆண்டுதோறும் கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர். அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் எண்ணிக்கை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஆறு நாட்கள் நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

நிரந்தர உண்டியல் 12, தற்காலிக உண்டியல் 60 என மொத்தம் 72 உண்டியலில் கிடைத்த காணிக்கையின் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 516 ரூபாய் கிடைத்தது. மேலும், தங்கம் 137 கிராமும், வெள்ளி 2973 ராமும் கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்