குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழாவுக்காக பல லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்து விரதம் தொடங்குவர்.
அதன்படி, முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 6 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.25 மணிக்கு உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருகாப்பு கட்டி வேடமணிய தொடங்கினர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்ற கோசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 700 போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்காரம் 24 ஆம் தேதி கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu