பெரியார், அண்ணா கனவுகளை முதல்வர் செயல்படுத்துகிறார்.. கனிமொழி எம்.பி. பேச்சு...
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட தபால் நிலையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், புன்னக்காயல் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட தபால் நிலையத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. தெரிவித்ததாவது:
புன்னக்காயல் பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான தபால் நிலையத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மாதாந்திர சேமிப்பு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை இந்த அஞ்சலகத்தின் மூலம் பெறலாம். மேலும், இதுவரை 5 கிலோ வரை மட்டுமே அனுப்பப்பட்டு வந்த பார்சல்கள் இனி 35 கிலோ வரை அனுப்பலாம்.
வெளிநாடுகளுக்கும் பார்சல்கள் அனுப்ப முடியும். மத்திய அரசின் தங்க பத்திரங்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். எல்.ஐ.சி. உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த முடியும். பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும், புன்னக்காயல் பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான இடங்கள் சர்வே செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றும் இந்தப் பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ. 45 லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும்.
தமிழ்நாடு மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கனவை தற்போது செயல்படுத்திக் கொண்டு இருக்கிற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழியில் நின்று அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டுவோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தமிழ்நாடு வட்டம் தென்மண்டல அஞ்சல் இயக்குநர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா, உதவி கண்காணிப்பாளர் வசந்தி, புன்னக்காயல் ஊராட்சி மன்றத் தலைவர் சோபியா, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu