திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் தங்க 12 இடங்களில் கொட்டகை
திருசெந்தூர் முருகன் கோவில்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற ஒரு வழக்காடு சொல் தமிழகம் முழுவதும் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகள் ஒன்றான திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கந்த சஷ்டி திருவிழா என்பது வெகு விமர்சியாக நடைபெறும். இந்த திருவிழாவை காண தென் மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்து செய்கின்றனர்.
இன்று நடைபெறும் சூரசம்காரம் மிகவும் பிரபலம். இந்நிலையில் இந்த ஆண்டு வரவுள்ள கந்த சஷ்டி திருவிழாவிற்கு கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என்ற ஒரு தகவல் சமூக வலைதளம் மூலம் பரவியது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிக முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
கடந்த மாதம் 28-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கோவிலில் சுமார் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, பணிகள் தொடங்கி பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதனால் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலனை கருத்தில் கொண்டு கோவில் உள்ள உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அதனால் கோவில் வெளி வளாகத்தில் கந்த சஷ்டி திருவிழாவிற்கு விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 12 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது.
அதாவது வசந்த மண்டபம், வேலவன் விடுதி, கலையரங்கம் பின்புறம், திருமண மண்டபம், திருநீறு மண்டபம், வடக்கு டோல்கேட், நாழிகிணறு பஸ் நிலையம் பகுதி, உணவு கூடம், கிழக்கு கிரி பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கந்த சஷ்டி திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யப்படும்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாதயாத்திரை பக்தர்களுக்கும், தங்கி விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக ஆண்கள், பெண்கள் என தலா 50 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கபட உள்ளது.
அதேபோல் தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களுக்காக 21 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்படும். மேலும் கோவில் வளாகத்தில் 26 இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu