தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் கோயிலில் இன்று குவிந்த பக்தர்கள் கூட்டம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா காலங்களை தவிர்த்து கோயிலுக்கு பக்தர்கள் வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கடந்த 28 ஆம் தேதி முதல் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்தாலும் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதனையெடுத்து கூட்ட நேரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஆனால், சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட அந்த வரிசை ஒரு கண் துடைப்பு நாடகம் போல் சில நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகவே வேல் குத்தி, காவடி எடுத்து, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தனர்.
தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் கோயிலில் குவிந்தனர். கோயில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீ பாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடற்கரை பகுதி, கோயில் வளாகம் உள்ளிட்ட நகரில் முக்கிய பகுதிகள் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
மேலும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் திருச்செந்தூர் நகர் பகுதியில் வந்ததால் அனைத்து இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். போக்குவரத்து காவலர்கள் களமிறங்கி சரி செய்த பிறகே ஓரளவு நெரிசல் குறைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu