திருச்செந்தூர் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்த நடிகர் யோகி பாபு.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசியல் கட்சி பிரமுகர்கள், வெளிநாட்டு தமிழர்கள், திரைப்பட நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருவதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டனர். பின்னர், நாழிகிணற்றில் குளித்த பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும், கோயிலில் தற்போது நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் யோகி பாபு இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார்.
கோயிலில் மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள், ஆகிய சன்னதிகளில் நடிகர் யோகி பாபு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் வெள்ளி வேல் ஒன்றை கையில் வைத்து இருந்தார். அதை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபுவை பார்த்ததும் ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த நடிகர் யோகி பாபு அங்கிருந்த கோயில் தூய்மை பணியாளரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார். தீவிர முருக பக்தரான நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் கோயிலுக்கு தொடர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu