திருச்செந்தூர் கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகரின் எல்லை பகுதியில் புறவழி சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக நகரின் எல்லை பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு இன்று (02.09.2021) ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக நகரின் எல்லை பகுதியில் புறவழி சாலை அமைப்பதற்கான இடத்தினை நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித்துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறை ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்து செல்வதற்கு ஒரு வழி பாதை மட்டுமே உள்ளது. ஊருக்குள் சென்று கோவிலுக்கு செல்லும் வழி மட்டுமே உள்ளது. இந்த வழி பாதையில்தான் அனைத்து வாகனங்களும் வந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே மாற்று பாதை வடபகுதி வீரபாண்டியபட்டிணம் பஞ்சாயத்து திருச்செந்தூர் நுழைவு வாயிலில் பாலம் உள்ளது. அந்த பாலம் கிழக்கு நோக்கி வளைந்து நேரடியாக கடற்கரை வழியாக கோவிலின் வளாகத்திற்கு வரை செல்வதற்கு அணுகு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் இடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூலம் நிலையான வழிகாட்டுதலின்படி விரைவில் சாலை பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோல தென் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் பேருந்து நிலையம் வழியாக கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எனவே தென் பகுதியிலும் இதுபோல சாலை ஏற்பாடு செய்ய இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரசம்ஹாரம் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் கூடும்பொழுது கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படுகிறது.
எனவே இந்த அணுகு சாலையின் மூலமாக வாகனம் மற்றும் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி கோவிலில் தரிசனம் செய்ய முடியும். மேலும் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் 5000 வீடுகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்பொழுது 500 வீடுகள் மற்றும் ஓட்டல்கள் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் தற்பொழுது 450 வீடுகள் மற்றும் ஓட்டல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகள் மற்றும் ஓட்டல்களை இணைப்பதற்கான நடவடிக்கையை பேரூராட்சி துறையின் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 350 ஓட்டல்கள் உள்ளது. அனைத்து ஓட்டல்களையும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பதன் மூலம் நகர் பகுதியில் சாக்கடை வெளியில் ஓடாமல் நகர் புறம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பின் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீரை செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை ஆறுமுகநயினார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் குற்றாலிங்கம், உதவி கோட்ட பொறியாளர் விஜய சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகிம், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித் துறை வெள்ளைச்சாமி ராஜ், வட்டாட்சியர் முருகேசன், முக்கிய பிரமுகர்கள் செங்குழி ரமேஷ், வால்சுடலை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu