திருச்செந்தூர் கோயிலில் ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப் பணிகள்.. ஆட்சியர் நேரில் ஆய்வு…

திருச்செந்தூர் கோயிலில் ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப் பணிகள்.. ஆட்சியர் நேரில் ஆய்வு…
X

திருச்செந்தூரில் நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் செந்தில்ராஜ்.

திருச்செந்தூர் கோயிலில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப் பணிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்வர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக அரசு மற்றும் எச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளை கடந்த அக்டோபர் மாதம் துவக்கி வைத்தார். பின்னர், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதையொட்டி பக்தர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெருந்திட்ட பணிகளையும், பாதாள சாக்கடை பணிகளையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக அரசு மற்றும் எச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளை பல்வேறு துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை மூலம் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளையும் ஆய்வு செய்தோம்.

திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்த் திருவிழா நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

நகராட்சி மூலம் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை சாலைகளில் விடாமல் அதற்குரிய இடங்களில் வளர்க்க வேண்டும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் குழாய்களை பாதாள சாக்கடை திட்டத்தில் கட்டணம் செலுத்தி இணைக்குமாறு நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளார்கள். அனைத்து கழிவு நீர் குழாய்களும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டால் நகரம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்.

நகராட்சியில் கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொன்னாங்குறிச்சி, குரங்கணி ஆகிய இடங்களில் இருந்து குடிநீர் வருகிறது. நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து, திருச்செந்தூர் ஆவுடையார்குளம் தெப்பக்குளத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் சுவாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவி திவ ஆனந்தி, நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!