மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

காயல்பட்டினத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காயல்பட்டினத்தில் ”மக்களுடன் முதல்வர்” முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் நகராட்சி ஜலாலியா நிஹ்ஹாக் மஜ்லீஸில் இன்று ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் சோதனை முன்னோட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், நடத்தப்படும் முகாமில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, எரிசக்தித்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.


மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர் மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் முத்து முஹம்மது, நகர்மன்றத் துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரகுராம், அரசு உயர் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!