ஆளுநருடன் சண்டையிட்டால் 2024 இல் உதயசூரியன் உதிக்காது.. திருச்செந்தூரில் எச். ராஜா பேட்டி..
திருச்செந்தூர் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான எச். ராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். தமிழை தொலைத்த திருடன் யார்?. திராவிடம் தான். நீதிக்கட்சி வழியாக வந்தவர்கள் தான் தமிழை தொலைப்பதற்காக திராவிடத்தை கொண்டு வந்தார்கள்.
திராவிடத்தை அளிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான். ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிட்டது என்றே அர்த்தம். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள். இதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.
எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரிய வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கமலஹாசனின் ஆதரவு குழப்பத்தைதான் தரும். ஜீரோ ப்ளஸ் ஜீரோ, ஜீரோ தான் என்ற கணித முறைப்படி தான் கமலஹாசனின் ஆதரவு அமையும். ஆளுநருடன் திமுக சண்டையிட்டால் 2024-ல் ஜனவரியில் உதயசூரியன் உதிக்காது என எச். ராஜா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu