திருச்செந்தூரில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்த கடற்கரை தடுப்பு சுவர்

திருச்செந்தூரில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்த கடற்கரை தடுப்பு சுவர்
X

திருச்செந்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்செந்தூர் பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. திருச்செந்தூர் பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல் மாலை வரை மழை கொட்டியது. இதனால் திருச்செந்தூர் நகர பகுதியில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது.

மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிழக்குப் பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடற்கரையோரம் காங்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருச்செந்தூரில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக கோவிலின் வடகிழக்கு பகுதியில் சுமார் 20 மீட்டர் தூரம் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட காங்கிரீட் தடுப்பு சுவர் இடிந்து கடலில் விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராம சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். கோவில் பாதுகாவலர்கள் அப்பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மழையின் காரணமாக அந்த பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதே பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி கிரிபிரகாரம் மேல்தட்டு இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story