திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல்

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தடுத்த போலீசாருக்கு கொலை மிரட்டல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் . 

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 21 பேர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, வெங்காய வித்து, கடல் அட்டை உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியை அதிகரித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவினர் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், வில்லியம் பெஞ்சமின் மற்றும் போலீசார் அடங்கிய மற்றொரு குழுவினர் அமலிநகர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அமலிநகர் கடற்கரையில் சிலர் சுமார் 50 சாக்கு மூட்டைகளில் இருந்த பொருட்களை 2 படகுகளில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த மூட்டைகளை பரிசோதிக்க முயன்றனர்.

அப்போது படகில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்த ஆலந்தலையை சேர்ந்த சுஜெய், நிஜான், பிரதாப், ஆனந்த், கார்ட்டர், சீரியாக், சரவல், சைமன், லிஸ்டன், ஆசைத்தம்பி, ஆரோக்கியம், அனஸ்டன், லேண்டோ, ராஜா, அஜித், அஜீஸ், மற்றொரு ராஜா, கெவிஸ், ஜாக்சன் லோபா, ஜோனஸ், லக்சன் ஆகிய 21 பேர் மற்றும் சிலர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, 2 படகுகளில் ஏற்கனவே ஏற்றி வைத்திருந்த மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பிச்சென்றனர். அப்போது 16 மூட்டைகளை மட்டும் கரையில் விட்டு சென்று விட்டனர். இந்த மூட்டைகளை போலீசார் எடுத்து பார்த்தபோது அதில் சுமார் 600 கிலோ பீடி இலைகள் இருந்தன. இவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற 21 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!