திருச்செந்தூர் அருகே மதுபான கடையில் ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்

திருச்செந்தூர் அருகே மதுபான கடையில்  ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்
X

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் மிகாவேல்.

திருச்செந்தூர் பரமன்குறிச்சி சாலையில் ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் மதுபானக் கடைகள் அருகே நிகழும் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்தவர் மிகாவேல் (28). இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக விடுப்பில் இருந்த இவர் நேற்று திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு மதுபானம் வாங்க சென்று உள்ளார்.

அப்போது மதுபானம் வாங்கிக் கொண்டிருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மதுபானம் வாங்க வந்த சிலர் திடீரென ஆயுதப்படை காவலர் மிகாவேலை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது வாகனத்தை சேதப்படுத்தியும் உள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர். காயமடைந்த மிகாவேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மதுபான கடை உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபானக்கடை அருகே போதை ஆசாமிகள் கூட்டாக சேர்ந்து ஆயுதப்படை காவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!