திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் கவனத்துக்கு…!

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் கவனத்துக்கு…!
X
திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18 ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள்,கோவில் வளாகம், கடற்கரை பகுதி, ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், மேலும் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை பணியமர்த்தியும் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ எந்தவித அனுமதியும் இல்லை. மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.

வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தம் செய்யுமாறும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!