திமிங்கலத்தின் உமிழ்நீர் இத்தனை கோடியா?.. திருச்செந்தூர் அருகே சிக்கிய 3 பேரிடம் விசாரணை..

திமிங்கலத்தின் உமிழ்நீர் இத்தனை கோடியா?.. திருச்செந்தூர் அருகே சிக்கிய 3 பேரிடம் விசாரணை..
X

திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரீஷ்.

திருச்செந்தூர் அருகே 11 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு போதைப் பொருள் மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் போலீஸார் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே விலை உயர்ந்த பொருட்கள் காரில் கடத்திச் செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் உடன்குடி புதுமனை சாலையில் இன்று திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அம்பர்கிரீஷ் என அழைக்கப்படும் திமிங்கலத்தில் உமிழ்நீர் என தெரியவந்தது.

இதையெடுத்து, காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த அருள் ஆல்வின் (40), பெனிஸ்டோ (44), வேலு கிருஷ்ணன் (35) ஆகிய மூன்று பேரையும் பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த 11 கிலோ அம்பர்கீரிஷ் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரீசின் சர்வதேச மதிப்பு சுமார் 11 கோடி என போலீஸார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ அம்பர்கிரீஷ் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட அம்பர்கிரீஷை காரில் கடத்திச் சென்றதாக அருள் ஆல்வின், பெனிஸ்டோ, வேலுகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பர்கீரீஷ் எங்கு கிடைத்தது? எங்கு கொண்டுச் செல்லப்படுகிறது? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அம்பர்கிரீஷ் என்றால் என்ன?

அம்பர்கிரீஷ் என்பது ஸ்பெர்ம் என்ற எண்ணெய் திமிங்கலத்தின் எச்சம் அல்லது உமிழ்நீர் அல்லது வாந்தி என அழைக்கப்படுகிறது. ஸ்பெர்ம் திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்தது உருவாகுவதாகச் சொல்லப்படும் அம்பர்கிரீஷ் திமிங்கலம் தன் இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது.

தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதால் வெளியாகும் உமிழ்நீர் கடலில் மிதந்து சூரியஒளி பட்டதால் கட்டியாக உருவாகி, கறுப்பு, வெள்ளை, சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் சில நேரம் அம்பர்கிரீஷ் சிக்குவது உண்டு. சில நேரம் கரை ஒதுங்குவதும் உண்டு.

இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் எண்ணெய் திமிங்கலங்கள் பாதுகாக்கபட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளதால், அம்பர்கிரீஷ் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் தயாரிக்கப்படும் வாசனை திரவிங்கள், விலை உயர்ந்த மதுபானங்களில் வாசனையை கூடுவதற்காக இணைத்தல் மற்றும் பல்வேறு மருத்துப்பயன்பாட்டுக்காக அம்பர்கிரீஷ் பயன்படுவதால் சர்வதேச சந்தையில் இதற்கு விலை அதிகம் ஆகும்.

ஒரு கிலோ அம்பர்கிரீஷ் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மீனவர்களுக்கு கிடைக்கும் அம்பர்கிரீஷை சிலர் ரகசியமாக அவர்களிடம் இருந்து வாங்கி ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து பின்னர் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!