கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த முத்துராஜ் (45) என்பவர் தூத்துக்குடி கீழுர் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணி செய்தபோது, கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி, பொன்நகரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் (50) மற்றும் தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த சேதுராமலிங்கம் (53) ஆகியோருடன் கூட்டுசேர்ந்து திட்டம்போட்டு, தூத்துக்குடியை சேர்ந்த 22 நபர்களிடம் தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்வதற்கு கடன் தருவதாக கூறி உள்ளார்.
மேலும், அவர்களிடம் அவர்களுக்கு உரிமையில்லாத முறைகேடான காசோலைகளில் கையெழுத்துக்களை பெற்று உள்ளனர். அவ்வாறு கையெழுத்து பெற்ற 22 காசோலைகளை தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த ராஜா (33) என்பவருக்கு சொந்தமான பபிதா நிதி நிறுவனத்தில் 22 நபர்களின் ஆதார் கார்டு நகல்களையும் சேர்த்து நிதி நிறுவனத்தில் தாக்கல் செய்து கடனாக 52 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை மோசடியாக பெற்று மூன்று பேரும் பிரித்து உள்ளனர்.
பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்தும், கடன் தொகையை திருப்பி கேட்ட நிதிநிறுவனத்தின் உரிமையாளரான ராஜாவை மூவரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக முத்துராஜ் என்பவரை திண்டுக்கல்லிலும், மற்றவர்களான பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் வைத்து நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu