தூத்துக்குடி பெண்ணிடம் ரூ. 61 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது

தூத்துக்குடி பெண்ணிடம் ரூ. 61 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது
X

தூத்துக்குடி பெண்ணிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சான்டலிஸிஸ் ஜான்.

லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ. 61 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.

லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ. 61 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ் மனைவி ஜான்சி (52) என்பவரது மகள் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 13.01.2022 அன்று ஒரு தகவல் வந்துள்ளது. அதில், லாட்டரியில் தங்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனை நம்பிய ஜான்சி குறுந்தகவல் வந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், எதிர்முனையில் பேசியவர் கேட்டுக் கொண்டதற்காக ஜான்சி தனது ஆதார் கார்டு, மற்றும் இதர விபரங்களை தெரிவித்து உள்ளார்.

பரிசு பணத்தை பெறுவதற்காக ரெஜிஸ்ட்ரேசன் கட்டணம், ஜி.எஸ்.டி, வருமானவரி என பல காரணங்களை மர்ம நபர்கள் கூறியதால் அதை நம்பி பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகும் ஜான்சியை தொடர்பு கொண்ட நபர்கள் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி ரூபாய் 50 லட்சம் என மொத்தம் ரூபாய் 60,97,200 பணம் மோசடி செய்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட ஜான்சி NCRP-இல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

ஜான்சி அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தும்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், ஜான்சியிடம் பணம் மோசடி செய்தது கேரளா மாநிலம் எர்ணாகுளம் முண்டன்வெளி பகுதியைச் சேர்ந்த யேசுதாஸ் ஜான் மகன் சான்டலிஸிஸ் ஜான் (26) என்பது தெரியவந்தது.

இதைத்தொடரந்து கேரளா மாநிலம் சென்ற தனிப்படை போலீஸார் சான்டலிஸில் ஜானை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதாகி உள்ள சான்டலிஸிஸ் ஜான் என்பவர் மேலும் பல நபர்களை ஏமாற்றி உள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....