தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
X

தூத்துக்குடியில் இருந்து நிவாரணப் பொருட்கள் கொண்டுச் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

மிக்ஜம் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சென்னை மக்களுக்கு உதவும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்டையார்பேட்டையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற ஏற்கெனவே ராட்சச 10 மின்மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை தண்டையார்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், போர்வை, துண்டு, குடிதண்ணீர் பாட்டில் உள்ளிட்ட சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்களை கொண்டுச் செல்லும் லாரியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் பிரபாகர், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ஹரி கணேஷ், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, மேயரின் உதவியாளர் பிரபாகர், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!