அடுத்தடுத்து அரிவாள் வெட்டு.. அதிர்ந்து போன தூத்துக்குடி காவல் துறை...

Thoothukudi Police News
X

Thoothukudi Police News

Thoothukudi Police News-தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Thoothukudi Police News-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு சம்பவமும், முடிவைத்தானேந்தல் கிராமத்தில் காவலர் ஒருவர் அரிவாளாளால் தனது உறவினர்களை வெட்டிய சம்பவமும் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அரிவாளால் வெட்டிய காவலர்:

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன். இவர், காவல் துறையில் உதவி ஆய்வாளராக தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு (ஹைவே பாட்ரோல்) வாகனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகளை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் முத்துக்குமார் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக முத்துக்குமாரும் உதவி ஆய்வாளர் சிவனின் மகளும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை முடிவைத்தானந்தல் கிராமத்திற்கு சென்ற காவலர் முத்துக்குமார் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த உதவி ஆய்வாளரான சிவனின் தம்பியும், முத்துக்குமாருக்கு சின்ன மாமனாரான தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் கணபதி சுப்ரமணியம் மற்றும் அவரது தம்பி பெரியநாயகம் ஆகியோர் தகராறில் ஈடுபட்ட முத்துக்குமாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது காவலர் முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவலர் கணபதி சுப்ரமணியம் மற்றும் பெரியநாயகம் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில் காவலர் கணபதி சுப்பிரமணியத்திற்கு தலையிலும், பெரியநாயகத்திற்கு கையிலும் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் பட்ட காவலர் கணபதி சுப்ரமணியத்திடம் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய காவலர் முத்துக்குமாரை வடபாகம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவலர் மற்றும் அவரது தம்பி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையத்தில் வைத்து வெட்டு:

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான முத்து செல்வம் மற்றும் ராஜா ஆகிய இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கிராமத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை சுரேஷ்பாபு முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, சகோதரர்களான முத்துசெல்வம் மற்றும் ராஜா ஆகியோர் போதையில் சுரேஷ்பாபுவிடம் தகராறு செய்துள்ளனர் . இதைத்தொடர்ந்து முத்துசெல்வம் மற்றும் ராஜா ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சுரேஷ்குமார் சென்றுள்ளார்.

அப்போது சுரேஷ்பாபுவை பின் தொடர்ந்து வந்த முத்துசெல்வம் மற்றும் ராஜா ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து சுரேஷ் பாபுவை கத்தியால் தாக்கி உள்ளனர். இதில், சுரேஷ்பாவுக்கு காலில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சுரேஷ்பாபு திருப்பி தாக்கியதில் முத்துச்செல்வம் மற்றும் ராஜா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் மூவரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து புகார் அளிக்க வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் சகோதரர்களான முத்துசெல்வம் மற்றும் ராஜா ஆகியோரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்டுள்ளதால் தமிழக காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!