தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
X
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். இவர், நேற்று காலை தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் சொந்த ஊரான விளாத்திகுளத்திற்கு சென்று உள்ளார். வீட்டில் ராமச்சந்திரனின் மாமியார் காமாட்சி தனியாக இருந்துள்லார்.

95 வயது மூதாட்டியான காமாட்சியால் தனியாக நடமாட முடியாததால் அவருக்கு பாதுகாப்பாக நாய் ஒன்று இருந்துள்ளது. இதனால் முன்பக்க கதவை மட்டும் பூட்டிவிட்டு பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு ராமச்சந்திரன் வெளியே சென்றுள்ளார்.

மேலும், ராமச்சந்திரன் ஊருக்கு செல்லும்போது தனது வீட்டின் அருகே கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் தான் ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப இரவு ஆகிவிடும் என்றும் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதால் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளமாரும் கூறி சென்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் ராமச்சந்திரனின் வீட்டில் உள்ளே புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் தங்க நகைகளை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த நாய் வெளி நபர் வீட்டிற்குள் புகுந்ததை தொடர்ந்து குரைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் நாயின் மீது போர்வையை போட்டு மூடி உள்ளார். உடனே, கட்டிலில் இருந்த மூதாட்டி காமாட்சி யார் அது? என கூக்குரல் எழுப்பி உள்ளார். மூதாட்டி எழுந்து நடமாட முடியாததை தெரிந்து கொண்ட திருடன் வீட்டின் பீரோவில் இருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிசெயின், செயின், மோதிரம் உள்ளிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் கவரிங் நகைகளை திருடி சென்று உள்ளான்.

மேலும் ராமச்சந்திரன் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட நபர் அருகே இருந்த மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய ராமச்சந்திரன் நகைகள் திருடு போயிருப்பதை தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வடபாகம் காவல்துறையினர் திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், ராமச்சந்திரனின் வீட்டின் அருகே கட்டட வேலை பார்த்த தொழிலாளர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் மாலை நேரத்தில் வீட்டில் ஆள் இருக்கும்போதே திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரனின் வீடு மற்றும் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்