தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை.. போலீஸார் விசாரணை…

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை.. போலீஸார் விசாரணை…
X

தூத்துக்குடியில் கொள்ளை நிகழ்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி கருப்பசாமியின் வீடு.

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி டூவிபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், காரைக்காலில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில், கருப்பசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று உள்ளார்.

அவர் வீட்டில் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், உள்ளே நுழைந்து முன்பக்க கதவை உடைக்க முயன்று உள்ளனர். கதவை உடைக்க முடியாததால் அவர்கள் வீட்டின் ஓரத்தில் இருந்த ஜன்னல் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கருப்பசாமியின் வீட்டில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் குறித்து கருப்பசாமியின் உறவினர்களுக்கு தெரியவர அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்த கருப்பசாமிக்கும், மத்திய பாகம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறையினர் கொள்ளை நிகழ்ந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும், சென்னையில் உள்ள கருப்பசாமியிடம் தொலைபேசியில் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் நகைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கருப்பசாமியின் வீட்டிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கருப்பசாமி சென்னையில் இருந்து தூத்துக்குடி திரும்பிய பிறகே எவ்வளவு பணம் மற்றும் எவ்வளவு பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள மத்தியபாகம் போலீஸார் கருப்பசாமியின் வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!