தூத்துக்குடியில் 3 மீன்பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி மறுப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை...
மீன் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் செந்நிறமாக காட்சியளிக்கும் தூத்துக்குடி கோமஸ்புரம் உப்பாற்று ஓடை.
தூத்துக்குடி அருகே உள்ள கோமஸ்புரம் பகுதியில் பல்வேறு மீன் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. உப்பாற்று ஓடை அருகே அமைந்துள்ள அந்த தொழிற்சாலைகளில் சில நிறுவனங்கள் மீன் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன கழிவுகளையும், மீன்களை கழுவுவதற்கும் பயன்படுத்தும் ரசாயன கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமலும் அப்படியே உப்பாற்று ஓடையில் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மீன் பதனிடும் ஆலைகளின் கழிவுகள் கலப்பதால் உப்பாற்று ஓடை முழுவதும் சிவப்பு நிறமாக மாறி ரத்த ஆறு போல காட்சி அளித்தது. இந்த நிலை தொடர்ந்தால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, நமது இன்ஸ்டா நியூஸ் தளத்தில் சிறப்பு செய்தியாக விரிவான தகவல்களுடன் பதிவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரடியாக அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், கழிவுகளை சுத்திகரிக்காமல் உப்பாற்று ஓடையில் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கோமஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். முறையாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் உப்பாற்று ஓடைகளில் கழிவுகளை வெளியிட்ட மூன்று மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விதிமுறைகளை மீறிய மூன்று தொழிற்சாலைகளும் தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்ததுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கோமஸ்புரம் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu