போலி விளம்பர மோசடி: தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸாரால் ரூ. 4.68 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் போலி விளம்பரங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட 4.68 லட்சம் ரூபாயை மீட்ட போலீஸார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இணையதளங்களில் வரும் போலியான விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத லிங்க் மூலம் பணத்தை இழக்கும் செயல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், சைபர் கிரைம் போலீஸார் அந்த பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனிற்கு கடந்த 02.03.2023 அன்று வந்த குறுஞ்செய்தியில் உள்ள Rewards PointRedeem செய்தவதற்கான லிங்க்கை கார்த்திக் கிளிக் செய்து அதில் வந்த போலியான இணையதளத்தில் தனது கிரெடிட் கார்டு விபரங்கள், கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்தபோது, கார்த்திக்கின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 2 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார்த்திக் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று கடந்த 09.05.2022 அன்று விளாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் என்பவரது முகநூல் பக்கத்தில் வந்த வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு வேலைக்காக 40,000 ரூபாய் பணம் அனுப்பி உயுள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த சுசில்குமார் சர்மா என்பவரது வங்கி கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து சுசில்குமார் சர்மாவின் அனுமதியின்றி பல தவணைகளாக மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 999 ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்தததையடுத்து, பாதிக்கப்பட்ட சுசில்குமார் சர்மா அளித்த புகாரின்பேரில் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சைபர் குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த மோசடி தொடர்பாக சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மோசடி செய்யப்பட்ட 4 லட்சத்து 67 ஆயிரத்து 499 ரூபாய் பணம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வைத்து சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விவரம் வருமாறு:
பொதுமக்கள் செல்போனில் தெரியாத எண்ணிலிருந்து வரும் வங்கி SMS அல்லது வாட்ஸ்அப்பில் இருக்கும் எந்தவித லிங்குளையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் உங்கள் வங்கி விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டாம்.
பணபரிவர்த்தனைகளை செய்யும் போது சம்பந்தப்பட்ட வங்கியின் உண்மையான இணையதளமா என்பதை உறுதி செய்த பின்னர் பயன்படுத்த வேண்டும். பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இணையதளத்தில் வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கப்பல்களில் வேலைவாய்ப்பு போன்ற விளம்பரங்களை பார்த்து முகம் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.
பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu