தூத்துக்குடி காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த திருடர்கள்.. கைகள் முறிந்து காயம்...
தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி திருட முயன்றதாக கைதான சங்கரநயினார் மற்றும் நெல்லையப்பன்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டாப்பாறை அருகே உள்ள கீழ செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் மனைவி காந்திமதி (வயது 75). கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நயினார் இறந்துவிட்டதால், காந்திமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 13.02.2023 அன்று அதிகாலை காந்திமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளனர். அவர்களைக் கண்டதும் காந்திமதி கூச்சலிட்டதால் இருவரும் காந்திமதியை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.
மேலும், காந்திமதி தொடர்ந்து கூச்சலிட்டதால் அவரை கத்தியால் தாக்கி உள்ளனர். மேலும், பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர். காந்திமதியிடம் பணம் இல்லை என தெரிந்துக் கொண்ட இருவரும் அவரை மேலும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
மூதாட்டி காந்திமதியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காந்திமதியின் மகன் ஆதிமூலப்பெருமாள் தட்டாப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விரைந்து நடவடிக்கை எடுக்க தட்டாப்பாறை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தட்டாப்பாறை போலீஸார் மூதாட்டி காந்திமதியை தாக்கியதாக கீழ செக்காரக்குடி சேர்ந்த சங்கரநயினார் (22) மற்றும் நெல்லையப்பன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைதான சங்கரநயினார் மற்றும் நெல்லையப்பன் ஆகிய 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கழிவறைக்கு சென்ற போது இருவரும் வழுக்கி விழுந்தாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு மாவுக்கட்டு வைத்தியம் செய்துள்ளனர். மூதாட்டியை தாக்கி திருட முயன்ற இரண்டு இளைஞர்கள் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதானவர்கள் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து கை மற்றும் கால்களில் முறிவு ஏற்படும் சம்பவம் அதிகரித்து வந்தது. தற்போது, திருட்டு மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அந்த சம்பவங்களில் ஈடுபடுவோரையும் போலீஸார் கைது செய்து முறையாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனிக்கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu