பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி.. தூத்துக்குடியில் மேலும் ஒருவர் கைது...

பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி.. தூத்துக்குடியில் மேலும் ஒருவர் கைது...
X

பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான ஒபேத் பால் மற்றும் போலீஸார்.

பேஸ்புக்கில் பிட்காயின் குறித்து விளம்பரம் செய்து ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வவ்வால்தோத்தி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). இவரது பேஸ்புக் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர், அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 740 ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRP எனப்படும் National Cyber crime Reporting Portal மூலம் புகார் பதிவு செய்துள்ளார். ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நடவடிக்கை மேற்கொண்டார்.


இந்த மோசடி புகார் தொடர்பாக தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சுதாகர் மற்றும் வசந்தகுமார் உட்பட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கைவும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், ராமரிடம் மோசடி செய்ததாக கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (32) என்பவரை கடந்த 03.02.2023 அன்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவரான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஓபேத் பால் (38) என்பவரை 16.02.2023 அன்று அவரது வீட்டருகே வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு ஒபேத் பாலை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து மேலும் ஒருவரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!