தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.25 கோடி மோசடி.. அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது...

தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.25 கோடி மோசடி.. அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது...
X
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.25 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்தாக அரசு மாணவர் விடுதி காப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (37). இவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி 11 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விளாத்திகுளம் புதூரில் வைத்து அலெக்சாண்டரை கைது செய்த தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு பேரூரணி சிறையில் அடைத்தனர். போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி ஒரு கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!