தூத்துக்குடியில் அனல் மின்நிலைய ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அனல் மின்நிலைய ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடியில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட என்டிபிஎல் அனல் மின்நிலைய ஊழியர்கள்.

தூத்துக்குடியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிபிஎல் அனல் மின்நிலைய ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி துறைமுக சாலையில் செயல்பட்டு வரும், என்டிபிஎல் அனல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 13 ஆம் தேதி முதல் தொடரந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்டிபிஎல் அனல் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி, என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார்.

சிஐடியு மாநில செயலாளர் ரசல் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். என்டிபிஎல் அனல் மின் நிலைய தொழிலாளர் கூட்டமைப்பு திட்ட செயலாளர் அப்பாதுரை கோரிக்கையை விளக்கி பேசினார்.

போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, சிஐடியு நிர்வாகிகள், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து சிஐடியு மாநில துணைச் செயலாளர் கண்ணன் கூறியதாவது:


தூத்துக்குடி என்டிபிஎல் அனல் நிலைய தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து என்டிபிஎல் நிறுவனம் மறுத்து வருகிறது.

சென்னையில் வருகின்ற 20 ஆம் தேதி முதன்மை தலைமை தொழிலாளர் துறை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து என்டிபிஎல் நிறுவனத்தின் தரப்பில் சட்டப்பூர்வமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நலத்திட்டம் சார்ந்த உரிமைகளை வழங்குவதற்கு அவர்கள் முன் வருகிறார்கள்.

இதர சம்பள உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக பேசுவதற்கு அவர்கள் தாமதம் செய்து வருகின்றனர். என்டிபிஎல் நிர்வாகத்தின் இந்த போக்கினை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. வேறு ஆலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களை என்டிபிஎல் அனல் மின் நிலையத்திற்கு வேலையில் ஈடுபடுத்தும் ஆலையின் செயலை நிறுத்த வேண்டும்.

தொழில் அமைதியை காப்பதற்காக மாநில அரசு முன்வர வேண்டும், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கண்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!