தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
X

தூத்துக்குடியில் உள்ள என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ளது.

தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்கள் மூலம் தினமும் ஆயிரம் மெகாவாட் வரை இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், என்டிபிஎல் நிர்வாகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்எல்சி அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், தொழிலாளருக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு அனல் மின் நிலைய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு என்டிபிஎல் அனல் நிலைய கிளைச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ரசல் கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து, அனல் மின்நிலைய முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரன், தையல் ரவி தாகூர், தெர்மல் கணபதி சுரேஷ், பாரத் பெட்ரோலியம் செயலாளர் லேனஸ், சிபிஎம் புறநகர் செயலாளர் ராஜா, ரயில்வே யூனியன் சார்பில் குருஸ் அந்தோணி, தளவாய், போக்குவரத்து பிரின்ஸ், துறைமுக சங்க நிர்வாகி நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!