தூத்துக்குடியில் அனல் மின்நிலைய ஒப்பந்த பணியாளர்கள் 5 ஆவது நாளாக போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய முகப்பு.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி லிக்னேட் கார்ப்பரேசன் தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற நிறுவனம் தூத்துக்குடி துறைமுக சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலையத்தில் தலா 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்கள் மூலம் தினமும் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அனல் மின்நிலையத்தில் சுமார் 1100 பேர் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி முதல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை என்டிபிஎல் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்எல்சி நிறுவனத்தில் வழங்குவது போன்று சமமான ஊதியம் வழங்க வேண்டும், ஈஎஸ்ஐ, பிஎப், பிடித்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, என்டிபிஎல் நிர்வாகம் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
மேலும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் உடன் மதுரையில் மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளாக என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, ஆலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தொலைவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டக் களத்தை வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுமார் 520 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமான பணிக்காக என்டிபிஎல் நிறுவனத்துக்கு வந்த வட மாநில தொழிலாளர்களை வைத்து பாதுகாப்பின்றி ஆலையை தொடர்ந்து இயக்கி வருவதாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். ஒப்பந்த பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu