தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்ற தந்தை-மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்ற தந்தை-மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் உத்தரவு..
X

தூத்துக்குடி நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி அருகே நீதிமன்ற உத்தரவு போன்று போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா பெற்ற தந்தை-மகனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பல்வேறு பகுதிகளில் நில மோசடி நிகழ்ந்து வருகிறது. இருப்பினும், இதுதொடர்பாக கிடைக்கப் பெறும் முறையான புகார்கள் குறித்து உடனடியாக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர் உயிரோடு இருப்பது போன்றும், உயிரோடு இருப்பவர் இறந்தது போன்றும், போலியான ஆதார் அட்டை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி சம்பவங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப் போன்று போலியாக ஆவணம் தயார் செய்து ஒரு நிலத்திற்கு பட்டா பெற்ற சம்பவமும், அதற்காக இருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவமும் தூத்துக்குடி அருகே அரங்கேறி உள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிசெல்வராஜ் (வயது 65). இவரது மகன் லட்சுமணகுமார் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு போன்று போலியாக ஆவணம் தயார் செய்து தட்டாப்பாறை முத்துசாமிபுரம் கிராமத்தில் உள்ள வேறு ஒருவருக்கு உரிமையான 44 சென்ட் நிலத்திற்கு தங்களது பெயரில் பட்டா பெற்று மோசடி செய்து உள்ளனர்.

இதுகுறித்து வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் தட்டாப்பாறை காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து சீனிசெல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் புலன் விசாரணை செய்து கடந்த 21.09.2022 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர் மோசடி செய்தகாக குற்றம்சாட்டப்பட்ட சீனி செல்வராஜ் மற்றும் லட்சுமணகுமார் ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த (தற்போது) கோவை மாநகர வடக்கு காவல் ஆணையாளராக உள்ள சந்தீஸ், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கவிதா ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது