தூத்துக்குடி அருகே சாலையோர உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தூத்துக்குடி அருகே சாலையோர உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
X

தூத்துக்குடி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சாலையோர உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய சாலையோர உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்படும் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேலக்கரந்தையில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸ் என்ற சாலையோர உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த உணவகத்தினை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் அடங்கிய குழுவினர் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, ஹோட்டல் ஆர்யாஸ் என்ற சாலையோர உணவகம் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கி வந்ததும், பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் சுகாதாரக் குறைபாட்டுடன் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.

மேலும், அந்த உணவகத்தில் உரிய லேபிள் விபரங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ அளவிலான சிப்ஸ் வகைகளும், அச்சிடப்பட்ட காகிதத்தில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ வடை, பஜ்ஜி, முட்டைகோஸ் போன்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவு பாதுகாப்பு உரிமமின்றியும், சுகாதாரக் குறைபாட்டுடனும் உணவகம் இயங்கியதால், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் அந்த உணவகத்தின் இயக்கமானது நிறுத்தப்பட்டு, மூடி முத்திரையிட நியமன அலுவலரால் உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, மூடி முத்திரையிடப்பட்டது.

மேலும், அந்த உணவகத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பேருந்துகள் ஏதும் நிறுத்தக் கூடாது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் அருகில் இருந்த மற்றொரு சாலையோர உணவகமும் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு உரிய லேபிள் விபரங்கள் இல்லாத 6 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி, அரசிதழ் மற்றும் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு பிரசுரித்தல், பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியீடுதல், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் மேளா போன்றவற்றை உணவு பாதுகாப்புத் துறையானது நடத்தி வந்தது.

ஆனாலும், இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாக இருப்பது, வணிகர்களின் சட்டத்தின் மீதான அக்கறையின்மையைக் காண்பிப்பதாக கருத ஏதுவாகின்றது.

இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத அல்லது காலாவதியான உரிமம் கொண்டுள்ள உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 31-இன் கீழ் அனைத்து உணவு சார்ந்த வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னர்தான், உணவுத் தொழில் தொடங்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டு உள்ளதால், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 55, 58 மற்றும் 63-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும், அனைத்து உணவகங்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, 9444042322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் புகார் எண்ணை நுகர்வோர் அறியும் வகையில் காட்சிப்படுத்திடல் வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ  இந்த நட்ஸ் &  ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil