தூத்துக்குடி- நாகப்பட்டினம் இடையே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய நான்கு வழிச்சாலை..

தூத்துக்குடி- நாகப்பட்டினம் இடையே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய நான்கு வழிச்சாலை..
X

தூத்துக்குடியில் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநர் ராவுத்.

தூத்துக்குடி- நாகப்பட்டினம் இடையே 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய தொழில் வர்த்தக சங்க செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் தர்மராஜ், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநர் யோகேஸ்வரர் ஆத்மராம் ராவுத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்திய தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்கு முன்பு முடிக்கப்படும். தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மேம்பால பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும்.

வல்லநாடு பாலத்தை சரி செய்யும் பணி 14 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை விரைவாக முடிக்கப்படும். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் 15 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது.

தூத்துக்குடி- நாகப்பட்டினம் இடையே 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியானது அரசின் ஒப்புதலை பெறப்பட்டு செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். இது சென்னைக்கு ஒரு மாற்று வழிச்சாலையாக அமையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநர் யோகேஸ்வரர் ஆத்மராம் ராவுத் தெரிவித்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா