தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் (வயது 46) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் தனது நகை அடகு கடை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக சிப்காட் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படை போலீஸார் கொலை நிகழ்ந்த இடம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையுண்ட முத்துக்குமாரின் சகோதரரான வழக்கறிஞர் சிவகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.
கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவகுமாரை பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் ஏற்கெனவே கொலையுண்ட ஆத்திப்பழத்தின் சகோதரர் ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கில் ராஜேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனவே, முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் உடல் பிரதேசப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறு அரங்கில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றுள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் குறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன் கூறியதாவது:
வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
மேலும், கொலை வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை குனடர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu