தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டவரை சுட்டுப் பிடித்த போலீஸார்!
X

தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நலம் விசாரித்தார்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது நகை அடகு கடை முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொலையாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மேலும், இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயபிரகாஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலையத்துக்குட்பட்ட தட்டப்பாறை அருகே காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் காவலர் சுடலைமணி உள்ளிட்ட காவல்துறையினர் ஜெயப்பிரகாஷை பிடிக்க முயன்றனாரம். அப்போது, போலீஸாரை ஜெயப்பிரகாஷ் அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.


இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், முழங்காலுக்கு கீழே காயம் அடைந்த ஜெயபிரகாஷ் கீழே விழுந்து உள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷை கைது செய்த காவல்துறையினர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஜெயபிரகாஷால் அரிவாளால் வெட்டப்பட்டதில் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணி ஆகியோரும் காயமடைந்தனராம். அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம்பட்ட காவல்துறையினர் மற்றும் போலீஸாரால் சுடப்பட்ட ஜெயப்பிரகாஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சந்தித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் போலீஸாரால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டாம்புளி பகுதியில் போலீஸார் பிடிக்க சென்றனர். அப்போது தப்பி ஓடி முயன்றதால் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் பாஸ்கரின் கை முறிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!