தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
X

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டவர்களை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் (வயது 46) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் தனது நகை அடகு கடை அருகே கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையுண்ட முத்துக்குமாரின் சகோதரரான வழக்கறிஞர் சிவகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.

கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவகுமாரை பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் ஏற்கெனவே கொலையுண்ட ஆத்திப்பழத்தின் சகோதரர் ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில் ராஜேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 25), அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கீழக்கடையத்தை சேர்ந்த ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம், கம்மவார்பாளையத்தைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் (30) ஆகிய மூவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வழக்கறிஞர்கள் முற்றுகை:

இந்த நிலையில், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும் தூத்துக்குடி ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் சிப்காட் போலீஸார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற நுவைவுவாயிலில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் செல்வின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போலீஸாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஒரு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என்றும் கொலை குற்றவாளிகளை கைது செய்யாமல், கோர்ட்டில் சரணடைந்தவர்களை அழைத்து வந்துள்ளனர் என்றும் வழக்கறிஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று அவர் உறுதி அளித்தார். பின்னர், 3 பேரையும் போலீஸார் நீதிமன்றத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் நீதிமன்ற வளாகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் 3 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாரால் தேடப்பட்டவர் சரண்:

இதற்கிடையே, வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இதேபோல, மற்றொருவரான ஆறுமுகநேரியை சேர்ந்த முத்துராஜா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்