தூத்துக்குடியில் 2 ஆவது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்.. நீதிமன்ற பணிகள் பாதிப்பு...

தூத்துக்குடியில் 2 ஆவது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்.. நீதிமன்ற பணிகள் பாதிப்பு...
X

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் (வயது 46) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் தனது நகை அடகு கடை அருகே கடந்த 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீஸார் கொலை நிகழ்ந்த இடம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையுண்ட முத்துக்குமாரின் சகோதரரான வழக்கறிஞர் சிவகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.

கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவகுமாரை பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் ஏற்கெனவே கொலையுண்ட ஆத்திப்பழத்தின் சகோதரர் ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில் ராஜேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனவே, முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 25), அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கீழக்கடையத்தை சேர்ந்த ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம், கம்மவார்பாளையத்தைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் (30) ஆகிய மூவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

2 ஆவது நாளாக போராட்டம்:

இருப்பினும், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் யாரும் இன்னும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!