தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கனிமொழி எம்.பி. வைத்த கோரிக்கைகள் விவரம்..

தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கனிமொழி எம்.பி. வைத்த கோரிக்கைகள் விவரம்..
X

ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்த கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை, சென்னை ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத் தேவை குறித்த நீண்ட நாள் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றி தரும்படி அவர் கோரிக்கை மனுவை அளித்தார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், நிர்வாகச் செயலாளர் ஆனந்தன், துணைத் தலைவர் அந்தோணி முத்துராஜா ஆகியோர் உடனிருந்தனர். கனிமொழி கருணாநிதி எம்.பி. அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:

திருநெல்வேலி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16791/16792) ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தர வேண்டும். தற்போது மும்பை - மதுரை இடையே இயக்கப்படும் 'லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ்' (ரயில் எண். 11043/11044) ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தர வேண்டும்.

தற்போது, ​​மாநிலத் தலைநகர் சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே ஒரே ஒரு விரைவு ரயில் (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை- தூத்துக்குடி இடையே தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி- தூத்துக்குடி (ரயில் எண். 56741/56742) பயணிகள் ரயிலின் பயண நேரத்தை தற்போதைய 3 மணி நேரத்தில் இருந்து 1:30 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் மற்றும் வணிகர்கள் ரயில் சேவையை அதிகமாகப் பயன்படுத்தவும், அதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அந்த ரயில் ஆழ்வார்திருநகரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சென்னை சென்று திரும்பும் பயணிகளுக்கு உதவும். காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் 21 ரயில் பெட்டிகளுக்கான நடைமேடையை அமைத்து தர வேண்டும்.

குரும்பூர் ரயில் நிலையத்தில் 21 பெட்டிகளுக்கான நடைமேடையின் உயரத்தை மேம்படுத்தப்பட்ட அகலப்பாதை பாதைக்கு ஏற்றவாறு பயணிகளை பாதுகாப்பாக ஏறுவதற்கு மற்றும் இறக்குவதற்கு ஏற்றவாறு உயர்த்த வேண்டும். நாசரேத் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் 12 பெட்டிகளும், முதலாவது நடைமேடையில் 18 பெட்டிகள் நிறுத்வும் வழி செய்ய வேண்டும்.

தூத்துக்குடி- குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி- கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களை இதற்கு முன்பு இருந்தது போல இணைப்பு ரயிலாக இயக்க வேண்டும். கடம்பூர் ரயில்வே கேட் பகுதியில் சாலை மேம்பாலம் கட்டுவதை பரிசீலிக்க வேண்டும். தூத்துக்குடி- கோயம்புத்தூர் இடையே புதிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த பரிசீலிக்க வேண்டும்.

தூத்துக்குடி - மதுரை கோட்டத்தில், தூத்துக்குடி - மேல்மருதூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளதால், இந்தப் பகுதியில் பயணிகள் ரயில் இயக்க புதிய ரயில் பாதையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி இடையே ரயில் சேவைகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 4 முறை என அதிகரிக்க பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!